லக்னோ: உத்திரபிரதேசத்தில் கடும் வெயில் காரணமாக மின்மாற்றிகள் சேதமடைவதை தடுக்க, புதிய வழியை மின்துறை ஊழியயர்கள் கையாண்டு வருகிறார்கள். கோடை காரணமாக கடும் வெப்பநிலை அதிகரிப்பால் உத்திரபிரதேச மாநிலம் முழுவதும் மின்சாரத்திற்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பமும், மின்மாற்றிகள் அதாவது ட்ரான்ஸ்ஃபார்மர்கள் மீதான அதீத மின்சுமையும் இணைந்து மின்சாரம் தடைபடும் (tripping) சூழல் அடிக்கடி ஏற்படுகிறது.
இதனால் மின்மாற்றிகளை குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கோண்டா மாவட்டத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெயில் கடுமையாக இருப்பதால், மின்மாற்றிகள் அடிக்கடி செயலிழக்கின்றன. இதனையடுத்து மின்மாற்றிகள் மீது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றியும், பெரிய மின்விசிறிகளை வைத்தும் அவற்றை குளிர்வித்து வருகின்றனர்.
கோடைகாலத்தில் மின்சாரப் பயன்பாடு (குறிப்பாக AC பயன்பாடு) மிக அதிகமாக இருக்கும். இதனால் மின்மாற்றிகள் அதிகளவில் வெப்பமடைகின்றன. எனவே சேதம் ஏற்படாமல் தவிர்க்க மின்மாற்றியின் ரேடியேட்டர் (Radiator) கம்பிகளுக்கு அருகில் பெரிய இண்டஸ்ட்ரியல் மின்விசிறிகள் வைக்கப்படுகின்றன. இவை காற்றை வேகமாக வீசி வெப்பத்தைக் குறைக்கின்றன. மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் மின்மாற்றிகள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
