×

குமுளியில் வனத்துறையால் தடைபட்ட புறக்காவல் நிலைய சீரமைப்பு பணி மீண்டும் துவக்கம்

கூடலூர், மார்ச் 4: தமிழக- கேரள எல்லையில் உள்ளது குமுளி பகுதி. இங்குள்ள கேரள பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ்ஸ்டாண்ட் மற்றும் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. ஆனால் தமிழக பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அடிப்படை வசதகள் ஏதுமின்றி பஸ்நிறுத்தம் கூட இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். மேலும் வனப்பகுதி எனக்கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக எல்லை பகுதியில் சாலையோரங்களில் பல ஆண்டுகளாக இருந்த கடைகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் வனத்துறை அகற்றியது. இதற்கிடையே இங்கிருந்த தமிழக புறக்காவல் நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதனை சீரமைப்பதற்காக போலீஸ் நிர்வாகம் அண்மையில் செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு வந்து பணிகளை துவக்கினர். ஆனால் வனத்துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுமதி மறுத்ததால் பணிகள் தடைபட்டது. இந்நிலையில் வனத்துறை, காவல்துறை உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் புறக்காவல் நிலையத்தை சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி அதற்கான பணிகள் மீண்டும் துவங்கி உள்ளது.

Tags : Forest Department ,Kumuli ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...