×

என்எல்சி முதலாவது சுரங்கத்தில் பக்கெட் வீல் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது

 

நெய்வேலி, மே 26: என்எல்சி முதலாவது சுரங்கத்தில் பக்கெட் வீல் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதலாவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல் இயந்திரத்தில் திடீரென்று மின் கசிவு ஏற்பட்டது. பின்னர் இயந்திரத்தில் தீப்பிடித்து கன்வேயர் பெல்டில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்த ஊழியர்கள் இதுகுறித்து என்எல்சி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்புதுறை அதிகாரிகள் விரைந்து சென்று பக்கெட் வீல் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் இயந்திரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தின்போது என்எல்சி ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து என்எல்சி உயர் அதிகாரிகள் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விசாரணைக்கு பின் சேதமதிப்பு எவ்வளவு என்று தெரிய வரும் என என்எல்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் என்எல்சி முதலாவது சுரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : NLC ,Neyveli ,NLC India ,Cuddalore district ,NLC… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...