காலாப்பட்டு,மே 25: மரக்காணம் அருகே வடை வாங்கி கொடுத்து 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் நடுக்குப்பம் அடுத்த வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (62). இவர் மர வேலை செய்து வருகிறார். மேலும் ஆடு, மாடுகளை வைத்து பராமரித்தும் வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மரக்காணம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை அழைத்து அருகில் உள்ள கடையில் வடை வாங்கி வர சொல்லி இருக்கிறார்.
அந்த முதியவரின் சொல்படி அந்த சிறுமியும் வாங்கி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு வடையை கொடுத்து அருகில் அமர வைத்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார், முதியவர் கன்னியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
