×

திண்டுக்கல்லில் திறந்தவுடனே காந்தி மார்க்கெட்டுக்கு ‘கேட்’ வாக்கு ஆதாயத்திற்காக திறந்ததாக வியாபாரிகள் புகார்

திண்டுக்கல், மார்ச் 4: திண்டுக்கல் காந்தி மார்க்கெட் திறந்த சில மணிநேரத்திலே மூடப்பட்டது. ஆளும்கட்சியினர் வாக்கு ஆதாயத்திற்காக திறந்து விட்டு மீண்டும் மூடியதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய்கறி மார்க்கெட் சுமார் 300 கடைகளுடன் செயல்பட்டு வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டது. இதனால் வியாபாரிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று காந்தி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி துவங்கியது. தற்காலிக மார்க்கெட் கிழக்கு தாலுகா ரோடு, மெயின் பஜார் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் 350 கடைகளாக விரிவுபடுத்தப்பட்டு பணி முடிந்தும் மார்க்கெட் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கடைகளை விரைவாக திறக்கும்படி வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிப்.25ம் தேதி அன்று மதியம் அமைச்சர் சீனிவாசனால் மார்க்கெட் அவசர, அவசரமாக திறக்கப்பட்டது. அதன்பின் சில மணிநேரங்களிலே மார்க்கெட்டை மீண்டும் மூடி விட்டனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு கடைக்கும் அரசு நிர்ணயித்த ரூ.5 லட்சம் டெபாசிட் செலுத்தி விட்டோம்ஆனால் இதுவரையிலும் வியாபாரிகளிடம் கடைகளை ஒப்படைக்கவில்லை. இதற்கு காரணம் ஆளும்கட்சி தரப்பிலிருந்து ஒவ்வொரு கடைக்கும் கமிஷன் கேட்கப்படுவதே ஆகும். இதனால் மார்க்கெட்டை தினமும் நெரிசல் மிகுந்த பகுதியில் சிரமத்துடன் நடத்தி வருகிறோம். ஆளும்கட்சியினர் தங்களது வாக்கு ஆதாயத்திற்காக திறந்து மீண்டும் மூடி விட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே காந்தி காய்கறி மார்க்கெட்டை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘சின்ன, சின்ன பணிகள் முடிவடையாமல் இருப்பதாலே மார்க்கெட் செயல்படுவதற்கு தாமதமாகிறது’ என்றார்.

Tags : Dindigul ,Gandhi Market ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...