ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு

ராசிபுரம், மார்ச் 4: ராசிபுரம் அடுத்த மசக்காளிப்பட்டியில் சாலை விரிவாக்கப்பணியின் போது, கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்தது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக  லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி சாக்கடையில் கலந்து வீணாகியது. ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு ராசிபுரம்- பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது நகராட்சி பகுதியில், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்  செய்து வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால், கூட்டு குடிநீர் திட்டத்தில் பல இடங்களில் பிரதான குழாய் உடைவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மசக்காளிபட்டி பகுதியில், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் கொண்டு பணியாற்றிய போது, கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் உடைந்தது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வெளியேறிய தண்ணீர், ஆறாக ஓடி அருகில் உள்ள சாக்கடையில் கலந்து வீணானது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர்  குடிநீர் வீணானது. இதனால் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், உடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories:

>