×

குன்றத்தூர் அருகே தனியார் மருத்துவமனையில் கையில் அறுவை சிகிச்சை செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் சாவு: உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

பூந்தமல்லி: குன்றத்தூர் அருகே தனியார் மருத்துவமனையில் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவத்தில், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

குன்றத்தூர் அருகே சிக்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (47). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி சரளா (38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில், ராஜேஸ்வரனுக்கு வலது கையில் கால்சியம் சத்து அதிகரிப்பு காரணமாக எலும்பு வளர்ச்சி இருந்ததாகவும், தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கால்சியம் சத்தை நீக்க பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 22ம்தேதி ராஜேஸ்வரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், மாலையில் ராஜேஸ்வரனின் மனைவி மற்றும் உறவினர்களை அழைத்து ராஜேஸ்வரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், இதய கோளாறு இருந்ததா என மருத்துவமனை டாக்டர்கள் கேட்டுள்ளனர். சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ராஜேஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரனின் மனைவி சரளா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனிடையே, ராஜேஸ்வரனின் உடலை பார்த்த போது அவரது கழுத்தில் ஓட்டை போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, ராஜேஸ்வரனுக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை அளித்தபோது திடீரென உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டாக்டரின் தவறான சிகிச்சையால் கணவர் இறந்துவிட்டதாக கூறி பூந்தமல்லி காவல் நிலையத்தில் சரளா புகார் அளித்தார். மேலும் கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே ரத்த பரிசோதனை, இதய செயல்பாடு போன்ற பல்வேறு சோதனை நடத்தவேண்டும். ஆனால் இந்த மருத்துவமனையில் எந்த ஒரு அடிப்படை சோதனைகளும் செய்யாமல் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர். மேலும் கணவரின் கழுத்தில் ஓட்டை போட்டதற்கும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பயிற்சி மருத்துவர்களையும், செவிலியர்களையும் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

தவறான சிகிச்சையால் கணவர் இறந்துவிட்டார். எனவே, கணவரின் உடலை பிரேத பரி சோதனை செய்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், ராஜேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kundrathur ,Poonamalli ,Rajeswaran ,Sikkarayapuram ,
× RELATED கட்டிட வேலை செய்வதுபோல் நடித்து போதை...