×

மாவட்டத்தில் முதல்கட்டமாக 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு ‘பாடி கேமரா’ வழங்கல்

தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக, 15 போலீஸ் ஸ்டேஷனுக்கு பாடி கேமராவை எஸ்பி பிரவேஸ்குமார் நேற்று வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் காவல்துறை சார்பில், பாடி கேமரா வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக நேற்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு, எஸ்பி பிரவேஸ்குமார் நேரடியாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் கூடுதல் எஸ்பி புஷ்பராஜ், தொழில் நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் தொழில் நுட்ப பிரிவு எஸ்ஐ திவ்யா ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து எஸ்பி பிரவேஸ்குமார் கூறுகையில், ‘இந்த கேமராவை இயக்க, 15 காவல் நிலையங்களிலிருந்து தலா ஒரு காவலர் வீதம், 15பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவை தங்களுடைய தோள்பட்டையில் பொருத்திக்கொண்டு ஆர்ப்பாட்டம், கலவரம் மற்றும் போராட்டம் ஆகிய நிகழ்வுகளை ரகசியமாக பதிவு செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையின் போதும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளை தெளிவாக பதிவு செய்யும் விதத்தில், இக்கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா