×

வெளியில் இருந்து ஆதரவு தரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்: ஆட்சியில் பங்கேற்க தன்னலம், பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் பேட்டி

 

சென்னை: திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த விசிக, தற்போது தவெக தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை, அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: திமுகவும் விசிகவும் எவ்வளவு கொள்கைப் புரிதலோடு களமாடினோம் என்பதை நாடு அறியும். இந்த முடிவை நாங்கள் எடுக்க தன்னலம், பதவி ஆசை என்கிற காரணிகள் முதன்மையானவை இல்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிதான் காரணம் என்பதை அண்ணன் ஸ்டாலின் அறிவார். தவெகவிற்கு ஆதரவு தருவது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதனையொட்டி விசிக முடிவு இருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.

எங்களின் முடிவை மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரானதாக பார்க்கவில்லை. சூழலுக்கு ஏற்ப எடுக்கும் முடிவை, என்ன முடிவாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கூறினார்கள். எனவே அவரது கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகு தான் இந்த முடிவை எடுத்தோம். தேர்தல் நேரங்களில்தான் கூட்டணி தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம். கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இடம்பெற்றோம். அது வலிமை பெற வேண்டும் என என்னால் இயன்ற முயற்சிகளை, பங்களிப்பைச் செய்தேன்.

என்னை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. நான் உறுதியாக நின்று அந்த முயற்சிகளை முறியடித்தேன். திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதற்கான என்னால் முடிந்த அளவு உறுதுணையாக இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்த கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. ஐயூஎம்எல் நிலைப்பாட்டில் நான் தலையிட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Thirumaalavan ,CHENNAI ,VISIKA ,DIMUKA ,DAVEKA ,Akhatsi ,Thirumavalavan ,Head Office ,Ashok, Chennai ,
× RELATED மோடியோ, அமித்ஷாவோ காரணமில்லை பாஜவின்...