கோவை: கோவையில் 10 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை போலீஸ் காப்பாற்ற முயன்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் விடிய விடிய 12 மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளி தம்பதி. இத்தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 1 வாரத்துக்கு முன்புதான் போத்தனூரில் இருந்து இப்பகுதிக்கு குடியேறினர். தம்பதியின் மகள் போத்தனூரில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அங்கிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வந்த நிலையில் 5ம் வகுப்பிற்கு கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர்.
இந்நிலையில், மாணவி கடந்த 21ம் தேதி இரவு 7 மணி அளவில் வீடு அருகே விளையாடி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் திடீரென மாயமானார். மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, வாலிபர் ஒருவர் பைக்கில் மாணவியை ஏற்றிச்சென்றதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பதறிப்போன மாணவியின் பெற்றோர், இதுபற்றி சூலூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் சிறுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பது தெரியவந்தது. சூலூர் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மாணவியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (33) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாணவியை ஏற்றிச்செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து, கார்த்திக்கை தனிப்படை போலீசார் தேடினர்.
இந்நிலையில், கண்ணம்பாளையத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் கார்த்திக் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் கார்த்திக் அங்கிருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்தார். இதில், அவரது வலது கை, வலது கால் உடைந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், மாணவியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கண்ணம்பாளையம் குளத்திற்கு வடபுறம் உள்ள வயலுக்கு அழைத்து சென்று, தனது நண்பரான மோகன்ராஜ் (35) உதவியுடன் கூட்டு பலாத்காரம் செய்தோம் என வாக்குமூலம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, பள்ளபாளையத்தில் பதுங்கியிருந்த இவரது கூட்டாளியான பாரதிபுரம், பள்ளபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர். கை, கால் முறிவு ஏற்பட்ட கார்த்திக், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகன்ராஜிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர், நண்பர் அழைத்ததால் சென்றேன், இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தோம் என்று அவரும் ஒப்புக்கொண்டார்.
இதனிடையே, மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 300க்கும் மேற்பட்டோர் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திரண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் காவல் நிலையம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். நேரம் செல்லச் செல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை கோவை சரக டிஐஜி சாமிநாதன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் ரெட்டி ஆகியோர் சமாதானம் செய்தனர். ஆனாலும் அவர்கள் ஏற்கவில்லை. கோவை-திருச்சி ரோட்டில் அமர்ந்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் விடிய விடிய நடந்தது. 22ம்தேதி இரவு 7.30 மணிக்கு துவங்கிய மறியல் போராட்டம், நேற்று அதிகாலை 6.15 மணி வரை நீடித்தது. கொலையாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்ற தகவல் கிடைத்த பிறகே பொதுமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டனர். கிட்டத்தட்ட 12 மணி நேரமாக நடந்த இந்த மறியல் போராட்டம் காரணமாக, அவ்வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதற்கிடையில், இரண்டாவது கொலையாளியான மோகன்ராஜ்-க்கு சூலூர் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 27ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை நேற்று காலை 10.30 மணியளவில் பெற்றோரிடம் போலீசார் காண்பித்தனர்.
முகம் சிதைந்த நிலையில் இருந்த உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். பெற்றோரை தொடர்ந்து, அவர்களது உறவினர்களுக்கும் சிறுமியின் உடல் காண்பிக்கப்பட்டது. பின்னர், நேற்று காலை 11.30 மணியளவில் பிரேத பரிசோதனை துவங்கியது. மதியம் 1.30 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்தது. இதன்பின்னர், மதியம் 1.45 மணிக்கு சிறுமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், சிறுமியின் உடலை, தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூருக்கு கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனை நடந்ததையொட்டி, இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து அங்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* விஜய் அரசு பதவியேற்ற பின் நடந்த கொடூர பலாத்காரங்கள்
விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் டெம்போ டிராவலரில் சித்ரவதை செய்து பலாத்காரம் செய்யப்பட்டார். சென்னை மெரினா கடற்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமி ஓடும் லாரியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபோன்று 10க்கும் மேற்பட்ட சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்து உள்ளது.
* சி.எம்.சார்… மவுனம் ஏன்…? போராட்டம் வெடிக்கும் உறவினர்கள் எச்சரிக்கை
மாணவி கொடூர படுகொலையை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மவுனத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் ஊடகங்களுக்கு முன்னால் கதறி அழுது ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர். ‘‘பெண்கள் எல்லாரும் ஏமாந்த சோணகிரிகள் கிடையாது, 10 மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அந்த வலி, யாருக்கு தெரியும்? எங்கள் குழந்தைகளுக்கு ஒன்று என்றால் நாங்க சும்மா விடமாட்டோம்’’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கொந்தளித்த அந்த தாயை பார்த்து, அருகில் இருந்தவர்களும் கண்ணீர் விட்டனர்.
மேலும், ‘‘உங்களை திறமையான ஆள் என்றும், சினிமாவை போல நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருப்பீர்கள் என்றும் நம்பித்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இந்த மாபெரும் வெற்றியை தந்து முதலமைச்சராக்கினோம்; நீங்கள் சினிமாவில் காட்டும் வீரத்தையெல்லாம் இப்போது நிஜ ஆட்சியில் மக்கள் முன்னிலையில் காட்ட வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும். உடனடியாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத்தராவிட்டால் கோவையில் மாபெரும் போராட்டம் வெடிக்கும்’’ என ஆவேசமாக முழக்கமிட்டனர்.
* தவெக எம்எல்ஏ விரட்டியடிப்பு
சூலூர் காவல் நிலையம் முன்பு மக்கள் மறியலில் ஈடுபட்டு இருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமார் ஆதரவாளர்களுடன் 5 கார்களில் காவல் நிலையம் வந்தார். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் எம்எல்ஏவின் காரை மட்டும் காவல்நிலையம் செல்ல அனுமதித்தனர். உடன் வந்தவர்களை ‘திரும்பி போ…’ என கோஷமிட்டு, திருப்பி அனுப்பினர். போலீசாரிடம் பேசிவிட்டு வந்த எம்எல்ஏ சுகுமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேச வந்தார். அதையும் அவர்கள் ஏற்க மறுத்தனர். ‘‘உங்கள் வேலையை பாருங்கள்…’’ எனக்கூறி அவரை அங்கிருந்து விரட்டினர்.
* முகம் சிதைத்து, முதுகெலும்பை உடைத்து தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை
சிறுமி கொலை குறித்து அவரது உறவுக்கார பெண் ஆவேசமாக கூறியதாவது: சிறுமியை காணவில்லை என புகார் அளித்தும் சூலூர் போலீசார் விரைந்து செயல்பட்டிருந்தால், இக்கொலை நடந்திருக்காது. போலீசார் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. வழக்கு பதிவு செய்துள்ளோம் எனக்கூறி, நீண்ட நேரம் இழுத்தடித்து விட்டனர். சிறுமியின் உடலை கைப்பற்றிய பிறகுதான், எங்களது புகார் மனு தொடர்பாக கையெழுத்து பெற்றனர். சம்பவம் நடந்த நாளில் இருந்து தொடர்ந்து, எங்களது மகளின் நிலை குறித்து கேட்டபோது, ‘‘உங்கள் மகள் பத்திரமாக உள்ளார், நாங்கள் மீட்டு விட்டோம். எங்களிடம்தான் உள்ளார்…’’ என போலீசார் பொய் சொல்லி எங்களை ஏமாற்றினர்.

சிறுமி பிரேதமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களில் பரவிய பிறகுதான் எங்களுக்கு உண்மை நிலை தெரியவந்தது. அப்போதும்கூட போலீசார் எங்களிடம் உண்மையை சொல்லவில்லை. சிறுமியின் உடலை இஎஸ்ஐ மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டபோது எங்களுக்கு மயக்கமே வந்துவிட்டது. சிறுமியின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. கல்லால் தாக்கப்பட்டு, முகம் கோரமாக காட்சியளித்தது. முதுகெலும்பை உடைத்து, தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
நாட்டில் மாற்றம் நடக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என நாங்கள் விஜய்க்கு வாக்களித்தோம். ஆனால், இப்பதான் கொடுமையே அதிகமாக நடக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய், இதுவரை ஆறுதல்கூட கூறவில்லை. எங்களது குடும்பத்தினரிடம் போனிலும் பேசவில்லை. இதுகுறித்து வீடியோ பதிவிட்டு முதல்வர் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதையும் அவர் செய்யவில்லை. ஆனால், அவரது சுயநலத்துக்காக மட்டும் சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறார். முதல்வரின் செயல், எங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
* குற்றவாளிகளை பிடித்தது எப்படி? நடந்தது என்ன? ஐஜி விளக்கம்
மேற்கு மண்டல ஐஜி., ரம்யா பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: இவ்வழக்கு, சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்புடையது என்பதால், வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தகவல் கிடைத்தவுடன் போலீசார் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை காரணமாக 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுமி கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்பது பிரேத பரிசோதனை அறிக்கையை படித்த பின்னரே தெரியவரும். டாக்டர்களின் அறிக்கையின்படி குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மாயமானது குறித்து தகவல் கிடைத்தவுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமியை கண்டுபிடித்து கொடுத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் இரவு முழுவதும் கிட்டத்தட்ட 250 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கார்த்தி கைது செய்யப்பட்டார்.
கார்த்தி, மோகன்ராஜ் ஆகியோர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இக்கொலை குறித்து தகவல் தெரிந்தும் மோகன்ராஜ் போலீசாரிடம் மறைத்துள்ளார். இந்த வழக்கு போக்சோ வழக்கு என்பதால் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். கார்த்தி மீது பழைய வழக்குகள் எதுவும் இல்லை.
அவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிறுமியை போலீசார் உயிருடன் மீட்டதாகவும், பின்னர் அவர் இறந்து விட்டதாகவும் பொதுமக்கள் கூறி வருவது தவறான தகவல். குற்றவாளிகள் ஊரை விட்டு தப்பிச்செல்வதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையின்போது, இரு குற்றவாளிகளும் போதையில் இல்லை. இவ்வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு ஐ.ஜி., ரம்யா பாரதி கூறினார்.
* மருத்துவமனையில் நீதிபதி விசாரணை
இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி கார்த்திக், கை, கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ, கொலை, பாலியல் வன்புணர்வு உள்பட 7 பிரிவுகளின்கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கோவை போக்சோ கோர்ட் நீதிபதி பகவதியம்மாள், நேற்று கோவை அரசு மருத்துவனைக்கு நேரில் சென்று, கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினார். பின்னர், வருகிற ஜூன் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுமியை தேடுவதுபோல் நடித்த கொலையாளி
சூலூர் சிறுமி கொலை வழக்கில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் (33), இவரது நண்பர் மோகன்ராஜ்(35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அளித்த தகவலின்படி, கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, சிக்கி உள்ளனர். சிறுமி காணாமல் போனதை அறிந்ததும் பெற்றோர், உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது சிறுமியுடன் விளையாடிய சக சிறுவர்கள், சிறுமியை, கார்த்திக் அழைத்துச்சென்றதாக தகவல் தெரிவித்தனர். அப்போது சிறிது நேரம் கழித்து எதுவும் நடக்காதது போல் அங்கு வந்த கார்த்திக், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து, அவரும் சிறுமியை தேடுவது போல் நடித்துள்ளார். இது, போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
* டிஜிபி, ஏடிஜிபி நேரில் ஆய்வு
இக்கொடூர சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர்தயாள் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
அவரும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இவர்களுடன், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி ஆகியோரும் சென்றனர். இக்கொடூர கொலையில் இரண்டு குற்றவாளிகள் ஈடுபட்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்ற தகவல் கிடைத்ததும் டிஜிபி மற்றும் கூடுதல் டிஜிபி இருவரும் அடுத்தடுத்து சென்னை புறப்பட்டு சென்றனர்.
* விரைவில் குற்றப்பத்திரிகை – அமைச்சர் சம்பத்குமார்
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அளித்த பேட்டி: சிறுமி கொலை செய்யப்பட் சம்பவத்தில் விசாரணை துரிதப்படுத்தப்படும். போலீசார், குற்றவாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் மிக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கித்தருவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் சிங்கப்பெண்கள் திட்டம் வரும் 27ம் தேதி அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இதன்மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும். ஆர்டிஓ மற்றும் காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* 7 பிரிவுகளில் வழக்கு
சிறுமி மாயம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலையாளிகள் கார்த்தி, மோகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் போக்சோ, கடத்துதல், மிரட்டுதல், சட்டவிரோதமாக அடைத்து வைப்பது, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை உட்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
* கொடூர தண்டனை கொடுங்கள்…!
இக்கொடூர செயல் குறித்து சிறுமியின் தாய் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மகள் சென்றாள். அங்கு அவளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து அழைத்துச் சென்றுள்ளனர். என் மகளை அழைத்து சென்றவர், என் பக்கத்து வீட்டில் குடியிருந்துவிட்டு, அண்மையில் காலி செய்தவர். சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அவர்தான் எனது மகளை அழைத்துச்சென்றது தெரியவந்தது. குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய முனைப்பு காட்டி வந்த வேளையில், அவரும் எங்களுடன் சேர்ந்து எனது மகளை தேடினார். சிசிடிவி கேமரா காட்சி, அவரை தெளிவாக காண்பித்து கொடுத்து விட்டது. எனது மகளின் சாவுக்கு காரணமான இரண்டு கொடியவர்களுக்கம் கொடூர தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
* ‘ஆக்ஷன் ஹீரோ போல் ஏதாவது செய்வீங்கன்னுதானே ஓட்டு போட்டோம்’
கோவை சூலூரில் கொலைசெய்யப்பட்ட சிறுமி உடல் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது பெண்கள் ஆவேசமாக தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். பெண் ஒருவர் கூறுகையில், ‘’சூலூர் தொகுதியில் 34 ஆயிரம் வாக்குகளை உங்க கட்சிக்கு (தவெக) அளித்தோம்.
நீங்கள் ஆக்ஷன் ஹீரோ போல், ஏதாவது செஞ்சிருவீங்க… என்றுதான் ஓட்டு போட்டோம். ஆனால் நீங்கள் இந்த சம்பவத்துக்கு பதில் கூறவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதேபோல், இனியும் ஒரு பெண்ணும், குழந்தையும் பாதிக்கப்பட கூடாது. இதே நிலை தொடர்ந்தால், கோவை மட்டுமல்லாது, தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்கிறீர்கள். ஆனால் புதுசா ‘வீரன்’ என்ற சரக்கு வந்துள்ளது. இதனை குடித்து விட்டு சட்டமன்றத்தில் பேச முடியுமா?, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணுறுப்பை அறுக்க வேண்டும். சுட்டுக்கொல்ல வேண்டும். உங்களுக்கு, உங்களது சகோதரிக்கு பிறந்தால், குழந்தையை கொஞ்சுறீங்க… மற்றவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். எங்க, பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு, சி.எம் சார்… பதில் சொல்லுங்க…’’ என ஆவேசமாக பேசினார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
