நன்றி குங்குமம் தோழி
2026ம் ஆண்டுக்கான ‘பசுமை ஆஸ்கார்’ எனப்படும் ‘விட்லி’ விருதுக்கான ஆறு வெற்றியாளர்களின் பட்டியலில் இரண்டு இந்தியப் பெண் இயற்கை ஆர்வலர்கள் பெயர்களும் இடம் பிடித்திருக்கிறது. பர்வீன் ஷேக், அழிந்துவரும் ஆற்றுப் பறவை இனங்களில் ஒன்றான ‘இந்தியன் ஸ்கிம்மரை’ பாதுகாக்கும் பணியில் தனது பங்களிப்பைச் செய்து வருபவர். பர்கா சுப்பா, ‘இமயமலை சாலமண்டர்’ எனப்படும் அரிய வகை இருவாழ்வியை பாதுகாப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். கௌரவமிக்க ‘பசுமை ஆஸ்கார்’ அல்லது விட்லி விருதைப் பெற்ற, ஆறு இயற்கை ஆர்வலர்களில் இரண்டு இந்தியப் பெண்களும் இடம் பெற்றிருப்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பர்வீன் ஷேக், பர்கா சுப்பா ஏப்ரல் 29 அன்று லண்டனில் உள்ள ராயல் ஜியோகிராஃபிகல் சொசைட்டியில் நடைபெற்ற ஒரு விழாவில், விட்லி விருதுகளின் புரவலரான ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UNITED KINGDOM) இளவரசி ஆன், விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தொண்டு நிறுவனமான ‘விட்லி ஃபண்ட் ஃபார் நேச்சர்’ ஆண்டு தோறும் ‘விட்லி’ விருதுகளையும், இயற்கை ஆர்வலர்களின் பணிகளுக்கு நிதி உதவியையும் வழங்கிவருகிறது. விருது பெறுபவர்களுக்கு தலா 50,000 பவுண்ட் (சுமார் 64 லட்சம் ரூபாய்) நிதியும் வழங்கப்பட்டுள்ளது. ‘இந்தியன் ஸ்கிம்மர்’ என்பது கத்தரிக்கோல் போன்ற அலகைக் கொண்ட பறவையாகும். ஆறு பாயும் பகுதியில் வாழும்.
இந்தப் பறவைகள் தங்கள் முக்கிய இரையான மீன்களை பிடிப்பதற்காக ஆற்றின் மேற்பரப்பில் ராக்கெட் போல வேகமாக சறுக்கிச் செல்லும் இயல்பு கொண்டவை. ஒரு காலத்தில் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இந்தப் பறவை, வாழ்விடச் சீரழிவின் காரணமாக ஏறக்குறைய மறைந்துவிட்டன. சுற்றுச்சூழல் மாசு, மணல் அகழ்வு, நீர்மின் திட்டங்கள், ஆறுகளில் அணைகள் கட்டுதல் ஆகியவையும் இந்தப் பறவைகள் அழிந்துபோகக் காரணங்கள்.
இந்தப் பறவை தற்போது இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் மட்டுமே வாழ்கிறது. நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் அரிதாகக் காணப்படுவதாக பதிவுகள் உள்ளன. உலகளவில் சுமார் 3,000 பறவைகள் வாழ்ந்தாலும் அதில், 90% இந்தியாவில் உள்ளன. ஸ்கிம்மர்கள், ஆற்றின் நடுவில் பருவ காலத்தில் உருவாகும் மணல் திட்டுகளில் கூடுகள் கட்டுகின்றன. அதனால், ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட கூடுகளை அழித்துவிடும். அதனால் இனப்பெருக்கம் குறையும்.
பர்வீன் ஷேக், சம்பல் ஆற்றுப்படுகைகளில் இந்திய ஸ்கிம்மரை பாதுகாக்க பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பர்வீன் நடவடிக்கைகளால், இந்திய ஸ்கிம்மர் பறவைகளின் எண்ணிக்கை 2017ல் 400லிருந்து 2025ல் சுமார் 1000மாக உயர்ந்துள்ளது. ‘‘நியமிக்கப்பட்டிருக்கும் பாதுகாவலர்கள் புதிய மணல் திட்டுகளை அடையாளம் காணவும், கூடுகளை கண்காணிக்கவும், இனப்பெருக்க காலத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும் உதவுகிறார்கள்” என்கிறார் பர்வீன்.
பர்வீனும், அவரது குழுவும், சம்பல் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரு இடங்களிலும் ஸ்கிம்மர் கூடுகள் மற்றும் கூடு கட்டும் விளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க, உள்ளூர் கூடு பாதுகாவலர்களை அதிகமாக நியமித்து அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும். பாதுகாவலர்கள் ஆற்றின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பாதுகாக்கும் வேலிகளை அமைப்பார்கள். சம்பல் ஆற்றில், அவர்கள் செயற்கை கூடு கட்டும் தளங்களையும் பரிசோதித்துப் பார்ப்பார்கள்.
உள்ளூர் அரசு சாரா அமைப்பான (சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு – Federation of Societies for Environmental Protection) அமைப்பின் அறிவியல் ஆலோசகரான பர்கா சுப்பா, மேற்குவங்கத்தில் உள்ள டார்ஜிலிங் இமயமலைப் பகுதியில் ‘இமயமலை சாலமண்டரை’ப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். ‘இமயமலை சாலமண்டர்’ பல்லி, அரணைகளைப் போல தோற்றமளித்தாலும், சாலமண்டர்கள், நியூட் (Newt) என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இருவாழ்விகளாகும். இவை தவளைகள் மற்றும் தேரைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. மேலும், இழந்த உறுப்புகளை மீண்டும் வளர்க்கும் திறன் மிக்கவை.
இமயமலை சாலமண்டர், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. இது 17 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. இவற்றின் ஆயுள் 11 ஆண்டுகள். இந்த இனம் ஒரு காலத்தில் டார்ஜிலிங்கின் குளிர்ச்சியான, நிழலான ஈரநிலங்கள், வன விளிம்புகளில் பரவலாகக் காணப்பட்டது. இருப்பினும், ஈரநில இழப்பு, கட்டுப்பாடற்ற சுற்றுலா மற்றும் தேயிலை செடிகள் பயிரிடுவதற்காக நிலங்களை பண்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் சாலமண்டர்களுக்கு முதன்மை அச்சுறுத்தல்களாக மாறின. இந்த நெருக்கடிகளால், இமயமலை சாலமண்டர் தங்கள் வாழ்விடத்தை மாற்றுவது கடினமாக அமைந்தது. இனப்பெருக்கமும் குறையத் தொடங்கியது. தற்போது, டார்ஜிலிங் இமயமலையில், சுமார் 30 இனப்பெருக்கத் தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்தத் தளங்களில் பல, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ளன.
‘விட்லி’ விருது மூலம் கிடைத்த நிதியை, சாலமண்டரின் வாழ்விடங்களை மீட்டெடுக்க செலவு செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். உலகெங்கிலும் நீர்நில வாழ் உயிரினங்கள் அழிந்துபோவதற்குக் காரணமான கொடிய சிட்ரிட் பூஞ்சை நோய் இந்தப் பகுதிகளில் காணப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்துடன் நிலையான நிலப் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் உள்ளூர் மக்களை ஈடுபடுத்த முயற்சிகளை முடுக்கிவிடுவோம். உள்ளூர் மக்கள், தேயிலைத் தோட்ட மேலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, இமயமலை சாலமண்டர் இனத்தின் ஏழு இனப்பெருக்கத் தளங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்’’ என்கிறார் பர்கா சுப்பா.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
