டெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதில், நம் நாட்டு இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார். ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்புத் திருவிழாவின் 19-ஆவது பதிப்பில் உரையாற்றிய பிரதமர், தான் சமீபத்தில் சென்று வந்த ஐந்து நாள் வெளிநாட்டுப் பயணத்தின் போது பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மீது உலகளவில் ஆர்வம் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக இந்திய இளைஞர்கள் மற்றும் நம் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக தெரிவித்தார். சமீபத்திய வெளிநாட்டு பயணங்களின் போது வெளிநாடுகளும், உலகளாவிய நிறுவனங்களும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதை பார்த்ததாகவும், இது புதிய பொருளாதார வாய்ப்புகளுக்கு வழிவகுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது தூய்மையான எரிசக்தி, அத்தியாவசிய கனிமங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் நிலையான உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய துறைகளும் அதிவேகமாக முன்னேறி வருகின்றன; இந்தத் துறைகளில் உள்ள கூட்டாண்மைகள் ஒரு புதிய பொருளாதாரத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் கதவுகளைத் திறக்கின்றன. இந்திய இளைஞர்கள் இன்று ஒவ்வொரு உலகளாவிய தளத்திலும் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர்; இதே உணர்வும் ஆற்றலும் பொதுச் சேவையிலும் பிரதிபலிக்க வேண்டும். தங்கள் பணியைத் தேசிய சேவையின் ஒரு கருவியாகக் கருதும் இளைஞர்களின் முயற்சிகளால் ஒரு விகாசித் பாரத் கட்டமைக்கப்படும் என்று பேசினார்.
