சென்னை: கோவை சிறுமி கொலை வழக்கில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும், தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில் வேகம் காட்டாததன் விளைவே கோவை சிறுமி கொலை சம்பவம்’ என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்” என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
