×

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதால் ‘கரப்பான்பூச்சி’ கட்சியை கொண்டாடும் எதிர்கட்சி தலைவர்கள்: இளைய தலைமுறையினரின் இணைய அரசியலால் கலக்கம்

 

புதுடெல்லி: இணையத்தில் வைரலாகி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு சமீபத்தில் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது, போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி சட்டத்துறையில் நுழைபவர்களைக் குறிக்கும் வகையில் ‘ஒட்டுண்ணிகள் மற்றும் கரப்பான்பூச்சிகள்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், போலி பட்டங்கள் வைத்திருப்பவர்களை மட்டுமே தாம் அவ்வாறு குறிப்பிட்டதாக தலைமை நீதிபதி பின்னர் விளக்கம் அளித்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய மக்கள் தொடர்பு பட்டதாரியான அபிஜீத் திப்கே என்பவரால் ‘காக்ரோச் (கரப்பான்பூச்சி) ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதளப் பக்கம் நகைச்சுவையாகத் தொடங்கப்பட்டது. புதிய தலைமுறை இளைஞர்களிடையே இந்த விநோத பக்கம் மிகக் குறுகிய காலத்தில் சமூக ஊடகங்களில் பெரும்
வரவேற்பைப் பெற்று வைரலானது.

இந்நிலையில், இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக, கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் இறப்பதில்லை என்ற வாசகத்துடன் மற்றொரு புதிய கணக்கு இணையத்தில் தொடங்கப்பட்டது. இந்த கணக்கு முடக்கத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் நகைச்சுவை மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்த இடம் தர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ‘இதுபோன்ற இளைய தலைமுறையினரின் ஆற்றலை பிரதான அரசியலில் வாக்குப்பதிவாக மாற்ற வேண்டியது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு’ என்றார். மேலும், சிவசேனா கட்சியின் தலைவரான பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘இளைஞர்கள் மத்தியில் பாஜக மீது கோபம் இருந்தாலும், அவர்கள் பாரம்பரிய எதிர்க்கட்சிகளை விட இத்தகைய கற்பனையான கட்சிகளையே அதிகம் ஆதரிக்கிறார்கள். எனவே, நாம் இளம் வாக்காளர்களின் மனநிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.

அதேபோல், இந்த இயக்கத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘புரட்சி என்பது ஒருபோதும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது அல்ல என்பதை தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்’ என்றார். இந்த நகைச்சுவை இயக்கம் இளைய தலைமுறையினரை வெறுப்பு அரசியலில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கைக் கதிராகத் திகழ்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும், அடக்குமுறைகள் எப்போதும் வலுவான எதிர்ப்பையே உருவாக்கும் என்று திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ராவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா நகைச்சுவையாகத் தன்னை ஒரு கரப்பான்பூச்சி என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், ‘முழு கட்டமைப்புமே முதலைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, கரப்பான்பூச்சிகள் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளார். மறுபுறம், இந்த விவகாரம் குறித்து பாஜக தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் இந்த அமைப்பின் நிறுவனரான அபிஜீத் திப்கேவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகின்றனர்.

அவர் தற்சமயம் அமெரிக்காவில் வசித்து வருவதாகவும், இந்தியாவின் யதார்த்த நிலையை அறியாதவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த சமூக ஊடகப் பக்கத்தைப் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதற்குப் பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாக பாஜக ஆதரவு பக்கங்கள் சமூக வலைதளங்களில் சாடி வருகின்றன. இதற்கிடையே, பிரபல வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், இணையத்தில் கிடைத்துள்ள இந்த மாபெரும் ஆதரவை கல்வி முறை சீர்திருத்தம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமை சட்டம் போன்ற நாட்டின் முக்கியப் பிரச்னைகளை நோக்கி திசைதிருப்ப வேண்டும் என்று இந்த அமைப்பிற்கு அறிவுறுத்தியுள்ளார். எப்படியாகிலும் இணையத்தில் வைரலாகி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

 

Tags : Karapanpoochchi ,Union BJP government ,New Delhi ,Karapanpoochchi Janata Party ,Chief Justice ,Surya Kant ,Supreme Court ,
× RELATED மேற்குவங்க தேர்தல் களத்தில் பரபரப்பு;...