மேலப்புலியூர் கோயில் விழாவில் பூந்தட்டு, மாவிளக்கு ஊர்வலம்

தென்காசி, மார்ச் 3: தென்காசி மேலப்புலியூர் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுந்தர விநாயகர், சந்தன மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழாவில் பூந்தட்டு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மேலப்புலியூர் சந்தன மாரியம்மன் கோயிலில் மாசி மாத கொடை விழா கடந்த 23ம்தேதி காலையில் கால் நாட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் அம்மனுக்கு முழுக்காப்பு அலங்கார சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக மாலையில் வில்லிசை ஆரம்பித்து இரவில் சாஸ்தா பிறப்பு பூஜை நடந்தது.

கொடை விழாவான நேற்று காலையில் ஆனைப்பாலம் பழனியாண்டவர் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் மாலையில் பொங்கலிடுதல் வைபவமும், தொடர்ந்து குழந்தைகளின் பூந்தட்டு மற்றும் பெண்களின் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இரவில் பழனியாண்டவர் கோயிலிலிருந்து தீர்த்தவாரி அழைத்து, நள்ளிரவில் சாமபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் இன்று மாலையில் மஞ்சள் நீராடுதல் வைபவமும், இரவில் சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.  ஏற்பாடுகளை வணிக வைசிய சமுதாயம் மற்றும் அன்பிற்பிரியாள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Related Stories:

>