×

மாணவர்கள் 5 நாள் பயிற்சி பட்டறைக்கு அனுப்பி வைப்பு

 

தர்மபுரி, மே 22: தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை, கோவையில் நடைபெறும் 5 நாட்கள் பயிற்சி பட்டறைக்கு, தர்மபுரி இருந்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வு என்பது, அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படும் மாநில அளவிலான உதவித்தொகை தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பட்டப்படிப்பு முடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2024-2025ம் கல்வியாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வில் 29 மாணவர்கள், 17 மாணவிகள் என மொத்தம் 46 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கு கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (21ம்தேதி) முதல், வரும் 25ம்தேதி வரை 5 நாட்கள் உண்டு உறைவிட முகாமாக பயிற்சி பட்டறை வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்கும் மாணவர்களை, அரசு பேருந்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் பேசிய முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, எதிர்காலத்தில் சிறந்த முறையில் உயர்கல்வி பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெருமாள், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சக்திவேல், கிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் பொன்னுசாமி மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். 2025-2026ம் கல்வியாண்டில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்வில், தர்மபுரி மாவட்ட அரசு பள்ளிகளை சார்ந்த 62 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 2ம் இடம் பெற்றுள்ளனர்.

Tags : Dharmapuri ,Goa ,Tamil Nadu Chief Minister's Talent Search Exam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...