கடலூர் ஆல்பேட்டையில் அதிரடி ரெய்டு பெங்களூர் தொழிலதிபரிடம் ₹51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

கடலூர், மார்ச் 3: புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற பெங்களூர் தொழிலதிபரிடம் இருந்து ரூ.51 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி எடுத்து வரப்பட்டதால் இந்த பணத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கடலூர் கோட்ட தனி வட்டாட்சியர் கலாவதி தலைமையிலான அதிகாரிகள் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பெங்களூரில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ராம்நாத்பிரசாத் (55) இருந்தார். அவரிடம் ரூ.51 லட்சம் பணம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இந்த பணத்தை கடலூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு தொழில் ரீதியாக எடுத்து சென்றதாக தெரிவித்தார். இருந்த போதிலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர். இதேபோல் மளிகை கடைக்காரர் மணிவண்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற 63 ஆயிரம் பணத்தையும் உரிய அனுமதி இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>