×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

திருவண்ணாமலை, மார்ச் 3: தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், சட்டமன்ற தேர்தலில் சுகாதாரத்துறையினரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ முத்துகுமாரசாமி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் அஜீதா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்ததாவது: கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்த தேர்தலில் சுகாதாரத்துறையினரின் பணி மிகவும் முக்கியமாகும்.
வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்தல், கைகளை கிருமி நாசினியால் தூய்மை செய்தல், உடல் வெப்ப பரிசோதனை செய்தல் போன்றவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதாரத்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல், பிரசார கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது, கொரானா தொற்று பரவல் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை அரசியல் கட்சியினரிடம் பெற வேண்டும். மேலும், அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் 24 ஆயிரம் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தடுப்பூசி போடப்படும் அலுவலர்களின் பட்டியல் தற்போது சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணிக்கு வரும்போது, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரங்களை அலுவலர்கள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Thiruvannamalai district ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...