×

தஞ்சையில் அடகு கடை உரிமையாளர்களுக்கான தேர்தல் விதிமுறை ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது

தஞ்சை, மார்ச் 3: தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதால், அடகு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை ஆர்டிஓவும், தஞ்சை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான வேலுமணி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள், பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு, அடகு கடை உரிமையாளர்கள், உள்ளூர் வணிக அமைப்பினர், அச்சக உரிமையாளர்கள், திரையரங்கம், கேபிள் டிவி உரிமையாளர்கள், திருமண மண்டபம் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு தரப்பினருக்கும் வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலும் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் ஏதும் மீறும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணி தெரிவித்தார்.

Tags : Thanjavur ,RTO ,
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...