மதுரை: பழைய குற்றாலத்தில் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சுபாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘’பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட வன அலுவலர்களால் ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், தினக்கூலிகள் இந்த அருவியைப் பார்க்கச் செல்லும்போது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே,பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, பூர்ணிமா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘ஏற்கனவே இதுபோன்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளது. அந்த உத்தரவின்படி, நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ எனக் கூறி அது தொடர்பான உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘ரூ.20 என்ற குறைந்த அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் முறையான அனுமதி உடனே வசூலிக்கப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
