×

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

அறந்தாங்கி, மார்ச் 3:அறந்தாங்கியில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த்மோகன் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழகம் முழுதும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அறந்தாங்கியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் அறந்தாங்கி சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அறந்தாங்கி சப் கலெக்டரும், அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனந்த்மோகன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி ஜெயசீலன், கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மார்ட்டின்லூதர்கிங், சிவக்குமார், சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்கண்ணன், மணமேல்குடி தாசில்தார் யமுனா, அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அறந்தாங்கி தொகுதியில் விதிகளுக்குட்பட்டு அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தை செய்ய வேண்டும், அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கி, தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு சப்கலெக்டர் ஆனந்த்மோகன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Assembly elections ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா