×

வெளியுலகிற்கு தெரியாமல் ரகசிய போராட்டம்: உலகின் பாப் இசை இளவரசி புற்றுநோயில் இருந்து மீண்ட அதிசயம்

லண்டன்: பிரபல பாப் பாடகி கைலி மினோக், 2021ம் ஆண்டு தனக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான பாப் இசை உலகின் இளவரிசி கைலி மினோக் (57), அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில், 2021ம் ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது இரண்டாவது புற்றுநோய் பாதிப்பு 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். முதல்முறை பாதிப்பு ஏற்பட்டபோது செய்ததைப் போலன்றி, இம்முறை இதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்பினேன். அந்த சமயத்தில் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தேன், வீட்டிலிருந்து வெளியே வரக்கூட பயந்தேன்’ என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் வந்தது குறித்து அவர் கூறுகையில், ‘தொடர் சிகிச்சைக்குப் பிறகு நான் குணமாகிவிட்டேன். மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாது என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால் பாப் இசைதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இத்தனை காலம் ரகசியமாக வைத்திருந்த இந்த விஷயத்தை இப்போது சொல்வதன் மூலம், என் மனதிலிருந்து அந்தச் சுமையை முழுமையாக இறக்கி வைக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு தனது 36 வயதில் முதன்முதலில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, தனது இசைச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து சிகிச்சை பெற்ற அவர், தற்போது மீண்டும் இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : London ,Kylie Minogue ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...