×

717 டாஸ்மாக் திறக்கப்படாத நாட்களுக்கான குத்தகை தொகையை திருப்பி அளிப்பது பற்றி அரசு பதில் தர ஆணை

மதுரை: தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஸ் உள்ளிட்ட பல்வேறு மனு தாரர்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறை கால நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் தமிழகத்தில் தற்போது 717 அரசு மதுபான கடைகளை மூட தமிழ்நாடு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் பல்வேறு நபர்கள் அரசிடம் முறையாக அனுமதிபெற்று சிற்றுண்டி விற்பனை செய்ய ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி அந்த கடைகளில் உள்ள காலி மதுபான பாட்டில்களை எடுத்து விற்பனை செய்வதற்காகவும் முறையாக அரசிடம் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். தற்போது அரசின் முடிவால் 717 கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எங்களது குத்தகை காலம் இன்னும் பல மாதங்கள் உள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குத்தகை காலத்திற்கான முழு தொகையும் நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம். இதனால் இந்த 717 கடைகளை மூட அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அல்லது குத்தகை கால பணத்தை உடனடியாக திரும்ப தர அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவத்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் பலருக்கு 5, 6 மாதங்களுக்கு மேல் குத்தகை காலம் பாக்கி உள்ளது. குத்தகைக்கான முழு தொகையையும் ஏற்கனவே செலுத்திவிட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி; மதுக்கடைகளை மூடும் தமிழக அரசின் கொள்கை ரீதியிலான முடிவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை அதே சமயத்தில் மனுதாரர்கள் ஒப்பந்த முறையில் அரசுக்கு ஏற்கனவே உரிய தொகையை கட்டியுள்ளதால் அந்த தொகையை திரும்ப செலுத்துவது குறித்து 2 வாரங்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags : TASMAC ,Madurai ,Rajesh ,Thoothukudi ,Court ,Tamil Nadu ,Tamil Nadu… ,
× RELATED லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக...