மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், ஒரு பிரதமராக சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்த மோடி சிறப்பாக பணியாற்றி வருவதக்க பாராட்டு தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடியின் அரசியல் சித்தாந்தத்திலிருந்து தனது சித்தாந்தம் மாறுபட்டிருந்தாலும், அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட மற்றும் பாதுகாக்க பிரதமர் மோடி திறம்படச் செயல்பட்டு வருவதை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். தேசிய நலன் கருதி கூட்டாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அனைவரும் ஒரு பொதுவான நோக்கத்துடன் முன்வந்து, நாட்டின் பெருமையை வலுப்படுத்த பங்களிக்க வேண்டும் என்றார்.
மும்பையில் புனேவைச் சேர்ந்த ‘லக்ஷ்மன்ராவ் குட்டே கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை’ ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பங்கேற்று பேசிய சரத் பவார், இந்தியாவின் கௌரவத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகள் எப்போதுமே தடையாக இருக்க கூடாது. நமக்கு வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருக்கலாம்; ஆனால் நாட்டின் கௌரவம் என்று வரும்போது, அரசியல் கருத்து வேறுபாடுகளை இடையில் கொண்டுவர கூடாது என்று குறிப்பிட்டார். அதே போல இந்திரா காந்தி, பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள், நாட்டின் எதிர்காலத்தையும் அதன் பெருமையையும் தங்கள் தலைமையின் மிக முக்கியக் கருவாக எப்போதும் கொண்டிருந்ததாக சரத் பவார் பேசினார்.
தனது ஆரம்பகால அரசியல் பயணத்தை நினைவு கூர்ந்த சரத் பவார், தனது சொந்த ஊரில் அப்போது கல்லூரி இல்லாததால், 1958-ல் 18 வயதில் புனேவுக்கு வந்ததாகக் கூறினார். பின் இளைஞர் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புனே நகர இளைஞர் காங்கிரஸின் தலைவரானதாகவும், பின்னர் தேசிய அளவில் பணியாற்றுவதற்கு முன் மகாராஷ்டிர இளைஞர் காங்கிரஸை வழிநடத்தியதாகவும் கூறினார்.
