×

திருப்பூர் வீரப்பசெட்டியார் நகரில் செல்போன் டவரை அகற்றக்கோரி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர், மார்ச் 3: திருப்பூர் வீரப்ப செட்டியார் நகரில் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரை அப்புறப்படுத்தக்கோரி, அப்பகுதி  பொதுமக்கள் செல்போன் டவர் அமைந்துள்ள இடத்தை நேற்று முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட வீரப்ப செட்டியார் நகரில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் அருகில், தனியார் பள்ளி, விநாயகர் கோவில் மற்றும் குடியிருப்புகள் ஏராளமாக உள்ள நிலையில், தங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில், செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி ்கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர்.

ஆனால், தொடர்ந்து செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், செல்போன் டவர் அமைக்கும் பணி முழுமை அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, செல்போன் டவரை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கோரி, பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை செல்போன் டவர் அமைந்துள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, செல்போன் டவரை  அப்புறப்படுத்தக்கோரி மனு அளித்தனர்.

Tags : Tirupasetyar ,
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை