×

திருவாரூர் பகுதியில் அரசு கட்டிடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு

திருவாரூர், மார்ச் 3: தமிழகத்தில் 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை கடந்த மாதம் 26ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், 26ம் தேதி மாலையிலேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் துவங்கின. அதன்படி சுவர் விளம்பரங்கள் அழிப்பு வாகன சோதனை உட்பட பல்வேறு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 2 தினங்கள் கடந்த பின்னரும் 28ம் தேதி வரையில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளும் துவங்க வில்லை. குறைந்தபட்சம் சுவர் விளம்பரங்களை அழிப்பது கூட நடைபெறாம்ல இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் (1ம் தேதி) படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து அவசர அவசரமாக கலெக்டர் சாந்தா உடனே அனைத்து துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கூட்டத்தை கூட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் கலெக்டர்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாறும் நிலையில் திருவாரூர் கலெக்டர் சாந்தா மட்டும் தனது அலுவலகம் மற்றும் அரசு வாகனத்தில் இருந்து வரும் பெயர் பலகையினை மாற்றாமல் கலெக்டர் என்றே வலம் வரும் நிலையில் இதுகுறித்தும் தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் பின்னரும் கூட நேற்று மாலை வரை கலெக்டர் சாந்தா தனது பெயர் பலகையை மாற்றிக் கொள்ளாதது வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thiruvarur ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்