மன்னார்குடி தொகுதியில் 21 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை

மன்னார்குடி, மார்ச் 3: மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் பல்வேறு தேர்தல் பணிகளுக்கான ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ஆர்டிஓவும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகர்சாமி தலைமையில் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களான தெய்வநாயகி, கமலா, ஜீவானந்தம், மணிமன்னன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள் மன்னார்குடி இளங்கோவன், நீடாமங்கலம் மகேஷ், கூத்தாநல்லூர் பரமேஸ்வரி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் நேர்முக உதவியாளர் மலர்க்கொடி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் பகுதிகளை சேர்ந்த 6 வருவாய் அலுவலர்கள், 115 விஏஓக்கள், 65 கிராம உதவியாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி கூறுகையில், மன்னார்குடி தொகுதியில் 1,25,304 ஆண், 1,33,118 பெண், 11 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,58, 433 வாக்காளர்கள் உள்ளனர்.

282 பாகங்களில் 150 துணை வாக்குச்சாவடி மையங்கள், இரு பாலினரும் வாக்களிக்கும் வகையில் 207 வாக்குச்சாவடி மையங்கள் என சேர்த்து மொத்தம் 357 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 21 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

சட்டமன்ற தொகுதிக்குள் தேர்தல் பறக்கும் படை, தேர்தல் நிலைக்குழு என மொத்தம் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் முழுமையாக கண் காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 30 மண்டல அலுவலர் குழுவும், தேர்தல் பணிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் தலா 4 அலுவலர்கள் வீதம் 1428 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வழிகாட்டுதலின்படி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமி கூறினார்.

Related Stories:

>