×

கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி; 16 மாநிலங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

புதுடெல்லி: வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. ஏற்கனவே இப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை மாறி, தற்போது வறண்ட வானிலை நிலவுவதால் வெப்பம் 45 முதல் 47 டிகிரி செல்சியஸ் (116.6 பாரன்ஹீட்) வரை பதிவாகியுள்ளது.

இதனால் ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வரும் 24ம் தேதி வரை இந்த கடும் வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 16 மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை 30 டிகிரியாக பதிவாவதால் மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

ஒடிசா மற்றும் ஆந்திரா போன்ற கடற்கரை பகுதிகளில் நிலவும் அதிக ஈரப்பதம் காரணமாக வெப்பத்தின் குறியீடு பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் பொதுமக்கள் வெப்ப பக்கவாதத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள பகல் 12 முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் கூறுகையில், ‘பொதுமக்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் அதிகப்படியான தண்ணீர், மோர் மற்றும் பழச்சாறுகளை பருக வேண்டும்; லேசான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்’ என்று வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும், வரும் 26ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரள கடற்கரையை தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், விரைவில் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : NEW DELHI ,Meteorological Observatory ,northwest ,India ,
× RELATED தஞ்சை புதுப்பட்டினத்தில் உணவகத்தில்...