×

செங்கல்பட்டு – அரக்கோணம் இடையே 2வது ரயில் தடம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்!

சென்னை: அரக்கோணம்- செங்கல்பட்டு இருவழித்தடத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.993 கோடி மதிப்பிலான இருவழிப்பாதை திட்டத்துக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தால் சென்னை செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில்களில் கூட்டநெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால் புறநகர் ரயில் போக்குவரத்து நெரிசல், தாமதம் ஏற்படுகிறது.

இதனால் செங்கல்பட்டு அரக்கோணம் ஒரு வழி ரயில் பாதையை, 1,538 கோடி ரூபாயில் இரட்டை வழிப் பாதையாக மாற்ற, தெற்கு ரயில்வே திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த நிலையில், பணிகளை துவக்க நிதி கேட்டு, ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், அரக்கோணம் செங்கல்பட்டு இடையிலான இரட்டை வழிப்பாதை திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அரக்கோணம் செங்கல்பட்டு இடையே 68 கி.மீ தூரத்துக்கு இரட்டை வழிப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை ரயில்வே பாதை பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரயில்கள் இயக்கும் இடத்தில், 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும். பயணியர் ரயில் மட்டுமின்றி, சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்க முடியும். இந்தத் தடத்தில் ஒற்றைப் பாதை இருப்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற ரெயில் நிலையங்களில் எதிரே வரும் ரயிலுக்காகப் பல மணி நேரம் ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இரட்டைப் பாதை அமைந்தால் இந்தத் தாமதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Railway Ministry ,Chengalpattu ,Arakkonam ,Chennai ,Chennai-Chengalpattu ,
× RELATED புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி...