முத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, மின்விளக்கு, எரிமேடை இல்லாத அவலம்: சடலங்களை எரிக்க, புதைக்க முடியாமல் அவதி

ஆவடி: ஆவடி மாநகராட்சி முத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் சாலை, தண்ணீர், மின்விளக்கு, எரிமேடை உள்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

ஆவடி மாநகராட்சி, 48வது வார்டு முத்தாபுதுப்பேட்டை ஏரியை ஒட்டி சுடுகாடு அமைந்துள்ளது. கடந்த 40ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த சுடுகாட்டை, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் அறவே இல்லாமல் உள்ளது. சடலங்களை கொண்டு வரும் பொதுமக்கள், அதனை எரிக்கவோ, புதைக்கவோ முடியாமல் பல ஆண்டுகளாக கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், முத்தாபுதுப்பேட்டை சுடுகாட்டில் அடிப்படை வசதிகளான மின்விளக்கு, தண்ணீர், சாலை, எரிமேடை, சுற்றுச்சுவர் என எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு சாலை வசதி இல்லாததால்,  மழைக்காலத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், சடலங்களை எடுத்து செல்ல முடியவில்லை. மேலும், மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், தண்ணீர் வசதி இல்லாததால் சடலங்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்லும்போது, மாட்டு வண்டிகளில் தண்ணீரையும் சேர்த்து கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. எரிமேடை இல்லாததால், சடலங்களை தரையிலேயே போட்டு எரிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. மழை காலத்தில் சுடுகாட்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால், சடலத்தை மக்கள் நடமாடும் பகுதியான தெரு ஓரமாக வைத்து எரிக்கின்றனர்.

இதோடு மட்டுமின்றி சுடுகாட்டில் பிளாஸ்டிக் மற்றும் வீட்டு குப்பை கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் கொட்டுகின்றனர். இதனால், சுடுகாடு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அங்கு பன்றிகள், நாய்கள்  மேய்ந்து சுகாதார சீர்கேட்டை உருவாக்குகின்றன. மேலும், அங்கு குப்பைகளை சிலர் எரிக்கின்றனர். இதனால், சுற்றுப்புற குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி வருகின்றனர். சுடுகாட்டில் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டியிட்டு கிடக்கின்றன. இதனால், அங்கு சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. குறிப்பாக, இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சில நேரங்களில், குடியிருப்புகளில் நுழைந்து மர்மநபர்கள் திருடிவிட்டு, சுடுகாட்டு வழியாக தப்பி செல்கின்றனர்.

மேற்கண்ட பிரச்னைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பினர். ஆனாலும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இதனால் பொதுமக்கள் சடலங்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல் பல ஆண்டாக அவதிப்படுகின்றனர். எனவே இனியாவது, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து போர்க்கால அடிப்படையில் சுடுகாட்டில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

Related Stories:

>