- முன்னாள்
- அமைச்சர்
- செம்மலை
- அஇஅதிமுக
- சேலம்
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி…
சேலம்: அதிமுக இரண்டாக உடைந்து கோஷ்டி பூசல் நிலவி வரும் நிலையில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் தலைமையிலும் அதிமுக இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு மூத்த நிர்வாகிகள் பலர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப்பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? ‘‘கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா? நோகுதய்யா மனசு நோகுதய்யா’’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும்.
உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது. பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது. இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப்பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது. என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக்கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன். இவ்வாறு செம்மலை தெரிவித்துள்ளார்.
‘மனஅமைதி தேடி அமெரிக்கா செல்கிறேன்’
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக இரண்டாக பிளவு பட்டிருக்கும் நிலையில் இதற்கு பாஜ பின்னணியில் இருந்து இயக்குகிறதா? என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலுமணி பிஜேபியுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதற்காக அப்படி கூறமுடியாது. அனைவரையும் அழைத்து பொதுச்செயலாளர் ஆலோசனை செய்ய வேண்டும். பொதுக்குழுவை கூட்டவேண்டும் என வேலுமணி தரப்பினர் கூறுவதில் எந்த தவறும் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 6 மாதத்திற்கு ஒருமுறை செயற்குழு கூட்டத்தையும் கூட்டவேண்டும்.
கட்சியை விட்டு பலர் சென்றுவிட்டனர். போனவர்கள் போக, எஞ்சியுள்ளவர்களையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும். நான்வேறு கட்சிக்கு செல்லமாட்டேன். தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதிமுக ஒரு வலுவான இயக்கம் என்பதை காட்டிக்கொள்ள தவறிவிட்டோம். அதிமுகவை பொருத்தவரையில் யாருக்கும் ஈகோ இருக்க கூடாது. ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் ஈகோவை விடவேண்டும். கட்சியில் நடக்கும் சம்பவம் மனவேதனயை தருகிறது. நிம்மதியாக தூங்க முடியவில்லை. மனஅமைதியின்றி தள்ளப்பட்டுள்ளேன். இதனால் அமைதி தேடி அமெரிக்காவில் உள்ள எனது மகள் வீட்டிற்கு செல்கிறேன். செப்டம்பர் மாதம் தான் திரும்பி வருவேன். இவ்வாறு செம்மலை கூறினார்.
