விருதுநகரில் தேர்தல் விதிமீறல் அகற்றப்படாத அரசு விளம்பரங்கள் : தேர்தல் ஆணையம் கவனிக்குமா?

விருதுநகர்: தேர்தல் விதிகளை மீறி விருதுநகரில் அரசு விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தேர்தல் ஏப். 6ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி துவங்கி 19ம் தேதியுடன் முடிகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.

இதனால், கட்சி சார்பில் சுவர் விளம்பரம், அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி படங்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் படம் மற்றும் அரசு விளம்பரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் விளம்பரங்கள் அகற்ற போதிய கால அவகாசம் வழங்கியும் விருதுநகர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள சுகாதார நிலையத்திலும், நகராட்சி அலுவலகத்தில் அரசு விளம்பர பலகைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதுபோன்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் அரசு அலுவலகங்களில் அரசு விளம்பரப் பலகைகள் அகற்றப்படாமல் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,`` தொகுதிவாரியாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தும் அதிகாரிகள், தொகுதிக்குள் இருக்கும் அரசு விளம்பரங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>