வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் தூர்வாரும் பணிக்காக ரகசிய பூமி பூஜை ஊராட்சி நிர்வாகம் மீது விவசாயிகள் அதிருப்தி

வருசநாடு, மார்ச் 2: வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் தூர்வாரும் பணிக்காக ரகசிய பூமி பூஜை நடத்திய ஊராட்சி நிர்வாகம் மீது விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். வருசநாடு கிராமத்தில் சுமார் 64.5 ஏக்கரில் பஞ்சம்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதனால், மழை காலங்களில் போதிய தண்ணீர் தேங்காமல், பாசன வசதி பெறும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரக்கோரி விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் மதுரை கிளை, கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து முதற்கட்டமாக கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன.

ஆனால், மரங்களின் வேர்ப்பகுதியை அகற்றவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருசநாடு ஊராட்சி நிர்வாகத்தினர் பஞ்சம்தாங்கி கண்மாயில் ரகசியமாக பூமி பூஜை நடத்தினர். இது குறித்து விவசாயிகள், அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், அதிருப்தியில் உள்ளனர்.

இது தொடர்பாக வருசநாடு கண்மாய் பாசன விவசாய சங்க செயலாளர் சேர்ந்த திருமுருகன் கூறுகையில், ‘நீண்ட கால போராட்டத்துக்கு பின்பு, பஞ்சம்தாங்கி கண்மாயில் 25 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிலையில், வருசநாடு ஊராட்சி நிர்வாகத்தினர் கண்மாய் தூர்வாரும் பணிக்காக ரகசிய பூமி பூஜை போட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்கவில்லை. இதனால், அதிருப்தியில் உள்ளனர். தேனி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, கண்மாய் தூர்வாரும் பணியை வருசநாடு விவசாய குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.

Related Stories:

>