×

ராஜதானி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை அமோகம் டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி, மார்ச் 2: ஆண்டிபட்டி அருகே, ராஜதானி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இது குறித்து டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிப்பட்டி அரு கே, ராஜதானி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணேசபுரம், அம்மாபட்டி, சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, ஜக்கம்மாள்பட்டி, அழகாபுரி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
பெட்டிக்கடைகள், சிறிய ஓட்டல்கள், ஊரின் ஒதுக்குப்புறமான மரத்தடி ஆகிய இடங்களில் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளிகள் அதிகம் வசிக்கும் கிராம பகுதிகளில் அனுமதியின்றி 24 மணி நேரமும் மது விற்பனை செய்கின்றனர். இதனால், கூலித்தொழிலாளர்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை மதுவுக்கு செலவழிக்கின்றனர்.  இதனால், அவர்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ராஜதானி போலீசார் கண்டும், காணாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேபோல, சட்டவிரோதமாக மணல் திருட்டு நடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ராஜதானி பகுதியில் சமூக விரோதச் செயல்களை தடுக்க, ஆண்டிபட்டி டிஎஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amokam ,DSP ,Rajadani ,
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...