×

திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு

திருவண்ணாமலை, மார்ச் 2: சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஈடுபட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி விளக்கினார். நகராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு விழிப்புணர்வு கோலங்கள் வரைந்திருந்தனர். மேலும், வீடுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அதைதொடர்ந்து, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்ததாவது: சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தத்தில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி, மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. அதற்கு தேவையான மின்னணு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்களை, அரசியல் கட்சியினர் முன்னிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து எடுத்திருக்கிறோம். மேலும், தேர்தல் பணியில் 24 ஆயிரம் அரசு அலுவலர்கள் மற்றும் போலீசார் ஈடுபட உள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவுபடி, பணியில் ஈடுபடும் அலுவலர்களின் விபரங்கள் அனைத்தும் கோவிட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி சுகாதாரத்துறை மூலம் நடைபெறுகிறது. குறைந்த அளவு வாக்குகள் பதிவான இடங்களில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த இடங்களில், தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ேதர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் மாவட்டத்துக்கு வர உள்ளனர். முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, செயல்விளக்க விழிப்புணர்வு பணிக்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டது.

Tags : Sandeep Nanduri ,Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...