×

வேலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்

வேலூர், மார்ச் 2: தமிழகத்தில், சுகாதாரப்பணியாளர்கள், கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள், சட்டசபை தேர்தல் பணியாற்ற உள்ள பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 4.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 877 பேருக்கு 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான நாள்பட்ட நோயாளிகள் என 1.06 கோடி பேருக்கு நேற்று முதல் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ளார். அதில் முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள், கோவின் செயலியில் பதிவு செய்து, தடுப்பூசி போட்டு கொள்ள வரலாம். அவ்வாறு பதிவு செய்ய முடியாதவர்கள், நேரடியாகவும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வரவேற்புக்கு ஏற்ப தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி நேற்று முதல் போடப்பட்டது. இதற்காக 11 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்ட்லென்ட் மருத்துவமனை, சத்துவச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், குடியாத்தம் அரசு மருத்துவமனை, ஊசூர், வடுகன்தாங்கல், திருவலம், ஒடுகத்தூர், கல்லப்பாடி, டிடி மோட்டூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பம் உள்ளவர்கள் வந்து போட்டுக்கொள்ளலாம். வரும்போது, ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags : Vellore district ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்