திருவாரூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தல் உயர் அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை

திருவாரூர், மார்ச். 2: திருவாரூரில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக கலெக்டர் சாந்தா நேற்று உயர் அலுவலர்கள் கூட்டத்தைக் கூட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கடந்த மாதம் 26ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் தொடர்பான பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன. மேலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் சென்ற தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அரசியல் கட்சியினர் சார்பில் அரசு கட்டிடங்களில் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் சுண்ணாம்பு கொண்டு அழிக்கும் பணி நடைபெற்ற நிலையில் அரசியல் கட்சியினரின் கார்களில் பொருத்தப்பட்டிருந்த கட்சி கொடி அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமன்றி மாவட்டத்திற்குள் இருந்து வரும் எம்எல்ஏ தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அவர்களது கைபேசி எண்கள் மற்றும் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பதற்கு உரிய எண்கள் போன்றவை பல்வேறு மாவட்டங்களில் உடனடியாக செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இது போன்று எந்த ஒரு பணிகளும் நடைபெறாததால் வாக்காளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டத்தில் தேதி அறிவிக்கப்பட்டு 2 தினங்கள் ஆன பின்னரும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப் படவில்லை. இந்நிலையில் இது தொடர்பான செய்தி நேற்றைய தினகரனில் வெளியிடப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்டம் முழுவதும் இருந்து வரும் அனைத்து துறை உயர் அலுவலருக்கான ஆலோசனை கூட்டத்தை கலெக்டர் சாந்தா நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தினார். அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினருடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து விவரம் தெரிவித்தார். அதில் மாவட்டத்தில் 10 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் இருந்து வருவதாகும், ஏற்கனவே 1168 வாக்குச்சாவடிகள் இருந்து வந்த நிலையில் ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து கூடுதலாக 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 1454 வாக்குச்சாவடி மையங்கள் இருந்துவருகின்றன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 243 கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் மற்றும் ஒரு வீடியோ குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் இந்த பறக்கும் படை மற்றும் வீடியோ குழுவினர் மூன்று சிப்டுகளாக மாற்றப்படும். மேலும் மாவட்டத்தில் போலீஸ் சோதனை சாவடிகள் 14 இயங்கிவருகின்றன. துணை ராணுவ படையினர் 91 பேர் வந்துள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் வாக்கு பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சாந்தா தெரிவித்துள்ளார். தேர்தல் தேதியை மாற்றி அறிவித்த கலெக்டர்: திருவாரூரில் தேர்தல் தொடர்பாக கலெக்டர் சாந்தா நேற்று நிருபர்களை சந்தித்த போது ஒருவித பதட்டத்துடனே காணப்பட்டார்.

பேட்டியின் துவக்கத்திலேயே தேர்தல் தேதி ஏப்ரல் 7 என்று தெரிவித்த நிலையில் இதனையடுத்து ஒரு சில நிருபர்கள் மேடம் தேர்தல் தேதி 6 என்று தெரிவிக்கவே அதன் பின்னர் மீண்டும் தனது பேட்டியினை ஆரம்பத்திலிருந்து துவக்கி தேர்தல் தேதி 6 என்று அறிவித்தார். மேலும் இடையிடையே பல்வேறு தடுமாற்றங்களுக்கு ஆளான நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் பணிகள் துவங்கப்படவில்லை. 2019 ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திருவாரூர் மாவட்டத்தில் தான் முதன்முதலாக அதிமுக பிரமுகரிடமிருந்து மிகப்பெரிய தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் 3 நாட்களாகியும் இதுவரையில் எந்த ஒரு தொகையும் கைப்பற்றவில்லை ஏன் இந்த தாமதம் என நிருபர்கள் பலரும் சரமாரியாக கேள்வி எழுப்பிய நிலையில் சற்று சுதாரித்துக்கொண்ட கலெக்டர் ஏற்கனவே பறக்கும்படை அமைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. எனவே இன்று (நேற்று) முதல் அவர்கள் பணிகளை மேற்கொள்வார்கள் என்றார்.

Related Stories:

>