×

கோயில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு: இந்து சமய அறநிலைய துறை உத்தரவு

 

சென்னை: கோயிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசாணையின்படி திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதர படிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேல் உதவித் தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்தாண்டு ஜூலை முதல் அகவிலைப்படியினை 58 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு செய்யப்பட்டு 60 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியினை 58 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடு உயர்வு செய்து 60 விழுக்காடாக வழங்கிட நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த அகவிலைப்படி உத்தரவானது பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிட பட்டியலில் இடம் பெறாதாவர்களுக்கு பொருந்தாது. அந்தந்த கோயில் நிதிநிலைமை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள செலவின உச்சவரம்பிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அனைத்து சார்நிலை அலுவலர்கள் தத்தம் அதிகார வரம்புக்குட்பட்ட கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையாக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Hindu Religious and Endowments Department ,Chennai ,Commissioner ,Sridhar ,Tamil Nadu government ,
× RELATED தேர்தலில் எஸ்ஐஆர் நெருக்கடி ஓய்ந்த...