சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று காலை, மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2280 குறைந்தது. வெள்ளியும் கிலோவுக்கு 10 ஆயிரம் சரிந்தது. தங்கம், வெள்ளி விலையில் சமீபகாலமாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. இதன் காரணமாக அன்றைய தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 20,400க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை திடீரென குறைந்தது. அதன்படி நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் 1 லட்சத்து 19,600க்கு விற்பனையானது. தங்கத்தை போல வெள்ளி விலையும் நேற்று காலையில் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.305க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
தொடர்ந்து நேற்று மாலையும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 குறைந்து ஒரு கிராம் ரூ.14,765க்கும், பவுனுக்கு ரூ.1,480 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 18,120க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் நேற்று மட்டும் தங்கம் விலை காலை, மாலை என பவுனுக்கு ரூ.2280 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் நேற்று மாலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.15 குறைந்து ரூ.290க்கு விற்பனையாகிறது.
