நன்றி குங்குமம் டாக்டர்
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசு, வேகமாக மாறி வரும் ஃலைப் ஸ்டைல் மாற்றம், காலநிலை மாற்றத்தால் உருவாகும் தொற்றுநோய்கள், ஓசோன் படலத்தின் மாற்றங்கள், தொழில்சார் பாதிப்புகள் மற்றும் தாமதமான நோயறிதல் போன்றவற்றின் காரணமாக சுவாச நோய்கள் குறிப்பாக, சிஓபிடி(COPD- Chronic Obstructive Pulmonary Disease) அதிர்ச்சியளிக்கும் அளவில் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமீபத்தில், ASSOCIATION OF INDIAN RESPIROLOGISTS TAMILNADU (AIRTN) AEROCON என்ற சிறப்பு அறிவியல் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அதில், நோய்கள் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்து பேசப்பட்டது. இந்த மாநாட்டில், 180-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நுரையீரல் நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், தொடக்க நிலையிலேயே நோயறிதல் மற்றும் சிகிச்சை மேம்பாட்டின் விழிப்புணர்வு முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் பாதிப்புகள்
மாநாட்டில் பேசிய நிபுணர்கள், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் காரணிகள் சுவாச நோய்களின் அதிகரிப்பில் முக்கிய பங்காற்றுவதாகக் கூறினர். PM2.5 போன்ற நுண்ணுத் தூசுப் பொருட்கள், வாகன புகை, மரவீட்டு எரிபொருள் புகை மற்றும் தொழிற்சாலை மாசுகள் ஆகியவை COPD மற்றும் ஆஸ்துமா நோய்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.மேலும், காலநிலை மாற்றம் காரணமாக மலர்தூள் (pollen) பரவல் மாறுபாடு மற்றும் தரைமட்ட ஓசோன் அதிகரிப்பு, ஆஸ்துமா தாக்கங்களை அதிகரிக்கிறது. இதனால் நோயாளிகளின் கட்டுப்பாடு சிரமமாகிறது.
தொழில்சார் பாதிப்புகளும் முக்கியமாக எடுத்துக்கூறப்பட்டன. கட்டுமானம், சுரங்கம், துணி தொழில் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் தூசி, புகை மற்றும் இரசாயனங்களுக்கு அதிகமாக உட்படுவதால், அவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் COPD ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
தாமதமான நோயறிதல் – ஒரு பெரிய சவால்
இந்தியாவில் COPD இன்னும் சரியாக கண்டறியப்படாமல் உள்ளது. பல நோயாளிகள் நோய் முற்றிய கடைசி கட்டத்தில் தான் மருத்துவர்களை அணுகுகின்றனர். இதற்குக் காரணம் விழிப்புணர்வு குறைவு மற்றும் முதன்மை சுகாதார மையங்களில் ஸ்பைரோமெட்ரி போன்ற பரிசோதனைகள் இல்லாமையே ஆகும்.
மருத்துவ நடைமுறைகளை வலுப்படுத்தல்
மருத்துவர்களுக்கான தொடர்ச்சியான கல்வி (CME) முக்கியம் என மாநாடு வலியுறுத்தியது. புதிய சிகிச்சை முறைகள், இன்ஹேலர் பயன்பாடு, நுரையீரல் பயிற்சி (pulmonary rehabilitation) மற்றும் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், ஆஸ்துமா மற்றும் COPD ஆகியவற்றின் ஒற்றுமை (overlap syndrome) பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சார் காரணிகள் இந்த இரண்டு நோய்களையும் இணைத்து காணப்படும் நிலையை உருவாக்குகின்றன. AEROCON மாநாடு, மருத்துவர்கள், அரசியல் நிர்வாகம் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. ஆரம்ப கட்ட நோயறிதல், காற்று மாசு கட்டுப்பாடு, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆகியவை மட்டுமே இந்த பிரச்னைக்கு நீண்டநாள் தீர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்
நோயாளிகள் நீண்ட நாட்கள் மட்டுமல்லாமல்- சுவாசம் சுலபமாக இருக்கும் வாழ்க்கையை வாழ உதவ வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது.
தொகுப்பு: ஸ்ரீ
