×

விராலிமலை தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி பரிசு பொருட்கள் வினியோகம் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

இலுப்பூர், மார்ச் 2: விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி அமைச்சர் சார்பில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் புகார் மனு அளித்தார். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வினியோகிக்கப்படுவதாக விராலிமலை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர்டிஓவுமான டெய்சிகுமாரிடம் நேற்று முன்தினம் மாலை திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களை நிர்வாகிகள் மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கி வருகிறார். இதை தடுக்கும் விதமாக தேர்தல் அதிகாரி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் விதியை மீறி பரிசு பொருட்கள் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சி தலைவர் மூலம் மாநில தேர்தல் ஆணையரிடம் கொடுப்போம். அதன் பின்னரும் நடவடிக்கை இல்லாவிட்டால் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுப்போம் என்றார்.

Tags : DMK ,Election Officer ,Viralimalai ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது