- தெவெகாவா
- சிபிஐ
- முதல் அமைச்சர்
- விஜய்
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சிபிஐ
- தலைமை நீதிபதி
- ஜோசப் விஜய்
- சட்டமன்ற சபை
சென்னை: சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக தலைமை குதிரைப்பேரம் நடத்திய விவகாரத்தில் குதிரை பேரம் நடத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டால் முதல்வர் ஜோசப் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அஇஅதிமுகவின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை கூறும்போது, தவெக கட்சி ேபரவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றபோது ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர் வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி அவர்கள் வாக்களித்ததையடுத்து அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
சிவி சண்முகம் தரப்பு தனி அணியாக செயல்பட வேண்டுமென்றால் அதிமுக எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். ஆனால், அவர்களிடம் 25 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், அவர்களை தனிக்குழுவாக அங்கீகரிக்க முடியாது. அங்கீகாரம் இல்லையென்றால் அவர்கள் அறிவித்த கொறடா நியமனம் செல்லாது. கட்சியின் பொதுச்செயலாளர் யாரை நியமிக்கிறாரோ அவர்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட கொறடா ஆவார். இந்த விவகாரம் மாதிரியான சிவசேனா வழக்கில் உச்சநீதிமன்றம் இதைத்தான் உறுதிப்படுத்தி உள்ளது. ஏக் நாத் சிண்டே கட்சித் தலைவராக இல்லாமல் இருந்தாலும் அவரிடம் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அதனால், அவர்கள் சிவசேனாவை கைப்பற்றி ஆட்சியிலும் பங்கேற்றார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவு தற்போது அதிமுகவில் நடைபெறும் பிளவு பிரச்னைக்கும் பொருந்தும். அதே நேரத்தில் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கொடுத்த புகார் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தலாம். காரணம் அவரது கட்சிக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வாக்களித்துள்ளனர். அப்படி தாமதப்படுத்தினால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாட முடியும். வழக்கு தொடரப்பட்டால் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியும். இது ஒடிசா மாநிலம் யுகே பரிதா வழக்கில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒடிசா உயர் நீதிமன்றம் 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது. அதை எதித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த வழக்கில் அரசியலமைப்பில் உள்ளதுபோல் சபாநாயகருக்கு அதிகாரம் இருந்தாலும் அது மீறப்படும்போது நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த உத்தரவை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதிட முடியும். நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தனக்கு தனி அதிகாரம் உள்ளது என்று கூறி சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் அடுத்த கட்டமாக உத்தரவு பிறப்பிக்கும். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தை சி.வி.சண்முகம் தரப்பு நாடினால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட வாய்ப்புள்ளது. அதிமுக பொதுக்குழுவை கூட்டி தாங்கள்தான் பெரும்பான்மை என்று சி.வி.சண்முகம் தரப்பும் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்கள் பொதுச்செயலாளரால் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்கள் தற்போது பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக இல்லை. இந்த நிலையில் அவர்களால் பொதுக்குழுவில் ெபரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இவ்வளவு சட்ட பிரச்னைகளும், கட்சியின் சட்ட விதியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளதால் தவெகவுக்கு ஆதரவு தந்த 25 எம்எல்ஏக்களும் தற்போது சட்ட சிக்கலில் உள்ளனர்.
மேலும், குதிரை பேரம் நடைபெற்றுள்ளது. இதேபோல் நாடாளுமன்றத்தில் 1993ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்பிக்களிடம் குதிரை பேரம் நடத்தி அந்த எம்பிக்களின் ஆதரவை பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அன்றைய அமைச்சர் பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதேபோன்று தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம் நடத்தியது உறுதியானால் முதல்வர் ஜோசப் விஜய் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்புள்ளது என்றார்.
