×

விருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு

விருத்தாசலம், மார்ச் 2: விருத்தாசலம் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட நாச்சியார்பேட்டை பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், எம்ஆர்கே நகர் ஆகிய பகுதி மக்களுக்காக கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விருத்தாசலம் நகராட்சியில் உள்ள காந்தி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாச்சியார்பேட்டை பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கடந்த 1992ம் ஆண்டு பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், குழாய்கள் சேதமடைந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களாக குடிநீர் கிடைக்காமல் நாச்சியார்பேட்டை பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்களுடன் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாச்சியார்பேட்டை பகுதி மக்கள் நேற்று காலை விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம் கூறி குடிநீர் பிரச்னையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Vriddhachalam ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...