×

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்

சென்னை: பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (14.5.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக ஊரக மற்றும் பகுதி-நகர்ப்புறப் பெண் தொழிலாளர்கள் இத்துறையின் வாயிலாக நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர் என்றும், அண்மைக் காலமாக, பருத்தி விலை உயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நூல் விலை உயர்வால் இத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்றும், நாட்டில் பருத்தி உற்பத்திக் குறைவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாகும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும், பருத்தியின் விலை கடந்த இரண்டு மாதங்களில் கண்டி (candy) ஒன்றுக்கு ரூ.54,700-லிருந்து ரூ.67,700 அதாவது, 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், அதே நேரத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.301-லிருந்து ரூ.330-ஆக அதிகரித்துள்ளது என்பதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இயலும் என்றும், ஆனால் பருத்திக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிப்பது, அதிகரித்து வரும் தொழிற்துறைக்கான ஏற்றுமதி ஆர்டர்களை நிறைவு செய்வதற்கும், உலகளாவிய போட்டி சந்தையினை எதிர்கொள்வதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக அமைந்துள்ளது என்றும், இலட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும், ஜவுளி மதிப்புச் சங்கிலியின் (textile value chain) நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதும் அரசின் மிக முக்கியப் பொறுப்பாகும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே, மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு, தற்போதுள்ள 11 சதவீத பருத்திக்கான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறை உலக அளவில் போட்டித்திறனுடன் திகழ்வதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் வழிவகை செய்யும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Joseph Vijay ,Indian ,Prime Minister Modi ,Chennai ,Chief Minister Shri Narendra Modi ,Indian Prime Minister ,Shri Narendra Modi ,Akaditham ,India ,
× RELATED ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு