×

60 வயதை கடந்த 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கோவை, மார்ச் 2: கோவை மாவட்டத்தில் முதல் நாளான நேற்று  60 வயதிற்கு மேற்பட்ட 774 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது. நாடு முழுவதும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி துவங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் துவங்கியது. இதில், முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நீரிழிவு உள்ளிட்ட இணை நோய்கள் உள்ள 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட 25 அரசு மருத்துவமனைகள் மற்றும் 79 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று துவங்கியது. காலை முதலே ஆர்வத்துடன் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர். 60 வயதை கடந்த டாக்டர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கோவை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தின் 4-வது மாடியில் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்தவர்களிடம் கோவிஷீல்டு, கோ-வேக்சின் எந்த தடுப்பூசி வேண்டும் என கேட்டு தடுப்பூசி போடப்பட்டது.

இதே முறை அனைத்து மருத்துவமனைகளிலும் பின்பற்றப்படுகிறது. பிரதமர் மோடி கோவி ஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டதால் முதியவர்கள் பலர் அந்த தடுப்பூசியை போட ஆர்வம்காட்டினர். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 20 நிமிடங்கள் வரை அப்சர்வேஷன் அறையில் அமர வைக்கப்பட்டு தடுப்பூசியால் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என கண்டறியப்பட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் 89 வயது முதியவர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 1,194 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்களில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 774 பேர் ஆவர். இந்த தடுப்பூசி அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும்,  தனியார் மருத்துவமனையில் ஒரு தவணைக்கு ரூ.250-க்கு வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வயது சான்றிதழ் ஆகிய சான்றுகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் தற்போது வரை ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை