பரமக்குடி, மே 12: பரமக்குடியில் நடந்த 45 பவுன் கொள்ளை தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 31 பவுன், ரூ.11.57 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அரசு ஐடிஐ அருகே, ஒரு வீட்டில் கடந்த 4ம் தேதி புகுந்த மர்மபநபர்கள் 45 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் எஸ்பி, நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீடு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில் 45 பவுன் கொள்ளை தொடர்பாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சரவணன், திருப்பாச்சேத்தி காமராஜர் நகரைச் சேர்ந்த பாண்டி அழகு ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 31 பவுன் நகை மற்றும் ரூ.11.57 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றினர். கைதான சரவணன் மீது பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 45 பவுனில் 31 பவுன் நகைகளை மீட்ட போலீசார், பாக்கி நகைகள் எங்குள்ளது, கைப்பற்றப்பட்ட ரூ.11.57 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதா அல்லது நகைகளை விற்று வைத்திருந்தனரா என மேலும், விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ‘பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் பட்சத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் அல்லது பொருட்களை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
