×

மதுரை காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை கட்டு ரூ.1200க்கு விற்பனை

மதுரை, மே 12: மதுரை காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை கட்டு ரூ.700 முதல் ரூ.1200 வரை விற்பனையானது. மதுரையை சுற்றிலும் 40 கிமீ தூரத்தில் இருக்கும் சோழவந்தான், பெரியகுளம், திருமங்கலம், திருப்புவனம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வாழை இலைகள் விற்பனைக்கு வருகிறது. கடந்த வாரம் கட்டு ரூ.1500 வரை வாழை இலைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது முகூர்த்தம் மற்றும் விஷேசங்கள், பண்டிகைகள் அதிகளவில் இல்லாததால் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு விலை ரூ.700 முதல் ரூ.1200 வரை விற்பனை ஆகிறது.

மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு சங்க தலைவர் சின்னமாயன் கூறும்போது, ‘‘தற்போது உணவகங்களில் பிளாஸ்டிக் இலை மற்றும் செயற்கை பேப்பர்களை பயன்படுத்துவதால், வாழை இலையின் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது. வாழை இலை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது மட்டுமின்றி, இந்த தொழிலை நம்பி வாழும் விவசாயிகள் பெருமளவில் பயனடைவர். பொதுமக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் வாழை இலையை பயன்படுத்த வேண்டும். திருமணம், கோயில் விழாக்கள் காரணமாக வரும் வைகாசி முதல் ஆடி மாதம் வரை 200 இலை கொண்ட கட்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆகும்’’ என்றார்.

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் காய்கறிகளின் நேற்றைய விலை விபரம் (ஒரு கிலோவிற்கானது): கத்தரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை, வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை, பாகற்காய் ரூ.50 முதல் ரூ.60 வரை, புடலங்காய் ரூ.50 முதல் ரூ.60 வரை, உருட்டு மிளகாய் ரூ.20 முதல் ரூ.60 வரை, சம்பா மிளகாய் ரூ.30 முதல் ரூ.50 வரை, சீனி அவரைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை, பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.60 வரை, சுரைக்காய் ரூ.15 முதல் ரூ.30 வரை. முருங்கை பீன்ஸ் கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரை, நைஸ் அவரை ரூ.80 முதல் ரூ.100 வரை, பெல்ட் அவரை ரூ.100 முதல் ரூ.120 வரை, பட்டை அவரை ரூ.140 முதல் ரூ.150 வரை, நாட்டு வெங்காயம் ரூ.40 முதல் ரூ.65 வரை, ஒட்டு வெங்காயம் ரூ.40 முதல் ரூ.65, பல்லாரி ரூ.15 முதல் ரூ.30 வரை. ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை.

Tags : Madurai ,Cholavanthan ,Periyakulam ,Thirumangalam ,Thiruppuvanam ,Kottampatti ,Mattuthavani ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...