பிஎஸ்எப் படையினர் 89 பேர் வேலூர் வருகை தமிழக- ஆந்திர எல்லைகளில் கண்காணிப்பு

வேலூர், மார்ச் 1: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க பிஎஸ்எப் படையினர் 89 பேர் நேற்று வேலூர் வந்தனர். அவர்கள் தமிழக- ஆந்திரா எல்லை சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து பிஎஸ்எப் படையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்திற்கு 89 பிஎஸ்எப் படையினர் பஸ்கள் மூலம் நேற்று வேலூர் அழைத்து வரப்பட்டு நேதாஜி ஸ்டேடியம் அருகே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிகளான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி சாலை, பேரணாம்பட்டு அரவட்லா ஆகிய பகுதிகளில் தமிழக போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக வாகனங்களில் மதுபாட்டில்கள், பரிசுப்பொருட்கள் மற்றும் வாக்காளர்களுக்கான பணம் கொண்டுவரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: