×

தமிழ்நாடு தேர்தலில் தவெக வெற்றி மாற்றம் சரியானதா என்பது காலப்போக்கில் தெரியும்: அமெரிக்காவில் அண்ணாமலை கருத்து

சான் பிரான்சிஸ்கோ: தமிழ்நாடு தேர்தலில் தவெக வெற்றி பெற்றதால் ஏற்பட்ட மாற்றம் சரியானதா என்பது காலப்போக்கில்தான் தெரியும் என்று அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெறாத நிலையில், சில கட்சிகளின் ஆதரவுடன் நேற்று முன்தினம் முதல்வராக விஜய் பதவி ஏற்றார்.

இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ‘ஸ்டான்போர்டு இந்தியா’ மாநாட்டில் கலந்து கொண்ட பாஜ தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் நடந்துள்ள அரசியல் மாற்றம் என்பது வியூகம் சார்ந்த திருப்பம். புதிய தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்படுவதைப் போன்ற பெரிய கட்டமைப்பு உடைப்பு நடந்துள்ளது. நீண்டகாலமாக இருந்த அரசியல் கட்டமைப்புகள் தற்போது சிதைந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மாநிலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் முக்கியமான மைல்கல்லாகும்.

தேர்தல் நேரத்தில் வெறும் 9 அரசியல் பொதுக்கூட்டங்களை மட்டுமே நடத்தி, பிரபல சினிமா நடிகராக இருக்கும் ஒருவர், தனது தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், ஒரு சவரன் தங்கம், பட்டுச் சேலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி என பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளார். இவை அனைத்தையும் அவர் நிறைவேற்றுவாரா என்பதை அடுத்த 5 ஆண்டுகளில் மக்கள் பார்க்கப்போகிறார்கள். இந்த மாற்றம் சரியானதா என்பது காலப்போக்கில் தான் தெரியும். அவரது ஆட்சிமுறை மற்றும் நேர்மையான நிர்வாகம் குறித்த வாக்குறுதிகள் எந்தளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று கூறினார்.

சசிதரூருடன் மோதல்
அமெரிக்காவின் ‘இந்தியா என்பது பாரதம்: வளர்ச்சி நிர்வாகம் மற்றும் அடையாளம்’ என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இடையே தொகுதி மறுவரையறை குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் சசி தரூர் பேசுகையில், ‘மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் மட்டும் தொகுதிகளை மாற்றியமைத்தால் தென் மாநிலங்கள் தங்கள் அரசியல் உரிமையை இழக்க நேரிடும். வட மாநிலங்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று தென் மாநிலங்களின் மீது இந்தி மொழி திணிப்பு போன்ற விவகாரங்களில் தங்கள் கருத்துக்களை திணிக்கக்கூடும்’ என்று எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, ‘வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வட மாநிலங்களுக்கு அதிக எம்பிக்கள் கிடைப்பது இயற்கையானது. எனது தொகுதி எம்பியை செய்தித்தாள்களில் மட்டுமே பார்க்கிறேன். ஒரு எம்பி ரிப்பன் வெட்டும் போதுதான் அவரை செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் இதே நிலை தான் இருக்கிறது. நமது பல்வேறு விருப்பங்கள் குறித்து கருத்துகளை கூறலாம். ஆனால் இவ்விசயத்தில் தீர்வு தேவை. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு 50 இடங்கள் கிடைக்கும். ஆனால் புதிய முறையில் 59 இடங்கள் வரை கிடைக்கும். அதாவது 9 இடங்கள் கூடுதலாகவே கிடைக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் லாப நஷ்டம் என்று பார்த்துக் கொண்டிருந்தால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது’ என்று கூறினார். சசி தரூரூரும், அண்ணாமலையும் மோதிக் கொண்ட போது, நடுவில் பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி அமர்ந்திருந்தார்.

Tags : Taweka ,Tamil Nadu ,Annamalai ,United States ,San Francisco ,Dweka ,Tamil Nadu Assembly elections ,Tamil Nadu Victory Club ,Vijay ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...