×

பொன்னமராவதி சந்தை பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து மறியல் முயற்சி

பொன்னமராவதி, மார்ச் 1: பொன்னமராவதி பேருந்து நிலையம் பின்புறம் அரசு மதுபானக் கடைதிறக்க முயற்சி செய்ததை தடுக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட எஸ்பியிடம் முறையிட்டு மனு கொடுத்தனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் பின்புறம் சந்தைப் பகுதியில் அரசு மதுபானக்கடை துவங்கப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதனையடுத்து பொன்னமராவதி தாசில்தார் திருநாவுக்கரசு சம்மந்தப்பட்டவர்களை அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தினர். போலீஸ் அதிகாரிகள், அரசு டாஸ்மாக் அலுவலர்கள் இதில் கலந்துகொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் மதுபானக்கடை வைப்பதில்லை. மாற்று இடத்தில் வைக்க ஆலோசனை வழங்கப்பட்டது என்று கூறினர். இதனையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதி பொன்னமராவதி பேருந்து நிலையம் பின்புறம் குறிப்பிட்ட இடத்தில் மதுபானக்கடையினை திறக்க மதுபாட்டிகளை வந்து இறக்கியுள்ளனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட், மக்கள்பாதை, தி.க, மாணவர் இளைஞர்-கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த கூடினர்.

இதனையறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த புதுக்கோட்டை எஸ்பி.அருண்சக்திகுமாரின் கவனத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமையில் எஸ்பியை சந்தித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏம்பல், கே.புதுப்பட்டி, பொன்னமராவதி ஆகிய மூன்று இடங்களில் மதுபானக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மேற்கண்ட மூன்று கடைகளுக்கும் மாற்று இடத்தில் வைக்க சம்மந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். இதனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடத்தில் இந்த கடையினை தற்போது திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படு என்றார். பொதுமக்கள் இது குறித்து ஒரு கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Tags : Bonamarawati market ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...